search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகவனேசுவரர் கோவில்"

    சேலம் சுகவனேசுவரர் கோவிலில் ரூ.53 லட்சத்து 55 ஆயிரம் செலவில் திருப்பணிகள் தொடங்கின. இதையொட்டி கோவிலில் பாலாலயம் நடந்தது.
    சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 20 ஆண்டுகள் ஆகியும் சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

    இந்தநிலையில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தக்கோரி இந்து சமய அறநிலைய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சுகவனேசுவரர் கோவிலில் ரூ.53 லட்சத்து 55 ஆயிரம் செலவில் திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்த திருப்பணிகள் தொடக்க விழா மற்றும் பாலாலய நிகழ்ச்சி நேற்று காலை சுகவனேசுவரர் கோவிலில் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. பின்னர் சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு 108 மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. முன்னதாக யாகம் நடத்தப்பட்டது.

    சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கோ பூஜை நடந்த போது எடுத்த படம்.

    அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், முருகன், அய்யப்பன், சரஸ்வதி, லட்சுமி, காலபைரவர், நவக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த சாமிகளின் உருவம் வரையப்பட்டு கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து விநாயகர் உள்ளிட்ட சாமி சிலைகள் அனைத்தும் மண்டபத்தில் பாதுகாப்பான அறையில் நெல்லால் மூடப்பட்டு அதன் மீது துணிகள் போர்த்தப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது

    இதுகுறித்து சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் தமிழரசு கூறும் போது, ‘சுகவனேசுவரர் கோவிலில் வர்ணம் தீட்டுதல், மேற்கூரை பழுதுபார்த்தல் உள்ளிட்ட திருப்பணிகள் ரூ.53 லட்சத்து 55 ஆயிரம் செலவில் நன்கொடையாளர்கள் மூலம் நடைபெறுகிறது. இந்த பணிகள் 9 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதைதொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்’ என்றார். 
    ×